ஸ்ரீஆனந்தமஹாகணபதயேநம:
ஸ்ரீகுருப்யோநம:
தாம்ரபரணி
(நீலகண்டதீக்ஷிதரின்
சிவலீலார்ணவ
மஹாகாவ்யத்திலிருந்து)
நம்நாட்டின் சரித்திரத்தை நோக்கும் பொழுது, தெய்வீக அம்சங்கள் பொருந்திய மஹான்களும், அவதாரபுருஷர்களும் , வேததர்மத்தை நிலைநாட்டுவதின் பொருட்டு,
அவ்வப்பொழுது, இப்புண்ய பாரததேசத்தில், முக்கியமாக தென்பாரதத்தில் தோன்றி, பல சாதனைகளைப் புரிந்துள்ளது அனைவரும் அறிந்ததே !
அப்படிப்பட்ட தெய்வாம்சம் பொருந்தியவர்களில்,
சிவரஹஸ்யத்தில் கூறியுள்ளபடி பரமேச்வரரின் அம்சாவதாரமாகத் தோன்றியவரும், விஜயநகர நாயகமன்னர்களால் பல விதங்களில் போற்றி,
கௌரவிக்கப்பட்டவரும், தென்னாற்காடுமாவட்டம், அடையப்பலம் கிராமத்தில் தோன்றியவரும், நூற்றுக்கு மேற்பட்ட சமஸ்கிருத க்ரந்தங்களை இயற்றியவரும், ஸர்வதந்த்ர ஸ்வதந்த்ரரும், 16வது நூற்றாண்டைச் சேர்ந்தவருமான மஹான் அப்பய்யதீக்ஷிதரும் ஒருவர். இவருடைய இளைய ஸஹோதரரின் பேரன், மதுரை மாநகரத்தைத் தலைநகராகக் கொண்டு, பாண்டியநாட்டை ஆண்ட திருமலை நாயகமன்னரின் அவைப்புலவராக அலங்கரித்தவர் மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர்.
தென் ஆற்காடு மாவட்டத்தில் பிறந்து,
தனது பெரியபாட்டனார் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதரிடமே ஆரம்பக் கல்வி பயின்று, அவரால் வளர்க்கப்பட்டு, தனது 72 வது வயதில், சிதம்பர க்ஷேத்திரத்தில் ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் சிவபெருமானுடன் ஐக்கியமான நிகழ்ச்சியை தனது 12 வது வயதிலேயே அதிசயத்துடன் பார்த்துவிட்டு , ' பாண்டிய நாட்டு மன்னரின் அரசவையில் பல ஆண்டுகள் அவைப் புலவராகவும்,
ஆலோசகராகவும் இருப்பாய்' என்ற தன் பாட்டனாரின் ஆசிமொழிகளைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி நகரங்களில் அவ்வமயம் பிரஸித்து பெற்று விளங்கிய மிகச்சிறந்த வித்வான்களிடம் சாஸ்திர க்ரந்தங்களனைத்தையும்,
செவ்வனே பயின்று, தன்னுடைய இளம் வயதிலேயே சிறப்புமிக்க புலமைப்பெற்று, பாண்டிய நாட்டுத் தலைநகரமாகிய மதுரை மாநகரத்தை அடைந்து, பாண்டிய மன்னன் திருமலை நாயக மன்னரின் ஆஸ்தான புலவராகவும்,
ஆலோசகராகவும் பணியாற்றினார்.
அரச அவையில் சிறிது காலம் பணியாற்றி விட்டு, இளமையிலேயே பணி ஓய்வு பெற்ற ஸ்ரீ தீக்ஷிதர்,
அரசனால் தான் வசிப்பதற்காகவே வழங்கப்பட்டதும், தாம்ரபரணி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளதும், கர்மானுஷ்டானங்களுக்கு உகந்த்துமான பாலாமடை என்ற ஒரு சிறு கிராமத்தில் தன்னுடைய அந்திமகாலம் வரை மனைவி புத்ரர்களுடன் வாழ்ந்துவந்தார்.
அந்திம காலத்தில் துறவு பூண்டு அங்கேயே ஸித்தி அடைந்தார்.
அவருடைய அதிஷ்டான ப்ருந்தாவனம் பாலாமடை கிராமத்தில் அமைந்துள்ளது.
ப்ருந்தாவனத்திற்கு தினசரி பூஜைகள் ஸரிவர நடைபெற்று வருகிறது.
ப்ரதி வருஷம் மார்கழிமாதம் சுக்ல அஷ்டமியில், நாட்டின் வெவ்வேறு பகுதியில் வசித்துவரும் தீக்ஷிதரின் வம்சத்தார்கள் பாலாமடை வந்து, தீக்ஷிதரின் ஆராதனை வைபவத்தை ஸாமவேத பாராயணத்துடன் வெகு சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தீக்ஷிதர் பாலாமடையில் வசித்து வந்தகாலத்தில் பல சமஸ்கிருத காவ்ய க்ரந்தங்களையும்
, சாஸ்திர க்ரந்தங்களையும் இயற்றியுள்ளார்.
இவருடைய மிகச் சிறந்த மஹாகாவ்யமான சிவலீலார்ணவம், 22 ஸர்கங்களில் , சுமார் 2000 செய்யுள்களில், தமிழ் புலவர் பரஞ்ஜோதி முனிவரின் 'திருவிளையாடல்புராணம்'
, மற்றும் 'ஹாலாஸ்ய மாஹத்ம்யத்தில் விவரிக்கப்பட்டுள்ள சிவபெறுமான் மதுரை மாநகரில் நிகழ்த்திய
64 திருவிளையாடல்களை விவரிக்கின்றது. திருவிளையாடல்களை ஆரம்பிக்கும் முன் நாட்டுப்பண்
என்று சொல்லப்படும் தாய்நாட்டை (பாண்டியநாட்டை) வர்ணிக்கும் பொழுது, தாம்ரபரணி நதியை தன்னுடைய மிகச் சிறந்த கற்பனா சக்திகளுடன் சுமார் 10 ஸ்லோகங்களில்வருணிக்கின்றார்.
இக்கட்டுரையின் நோக்கம்
, இவ்வருடம் நடைபெற உள்ள
'தாம்ப்ரபரணி புஷ்கரத்தில். பல வருஷங்கள் இவ்வாற்றின் கரையிலேயெ வசித்த' கவி ஸார்வபௌமர் நீலகண்டதீக்ஷிதர் தாம்ரபரணி நதியின் மஹிமையை எவ்வாறு வர்ணிக்கின்றார் என்பதை எடுத்துக்காட்டுவதற்கே
!
தாம்ரபரணி ஆற்றை
“ரத்னாபகா” ரத்னங்களாகிய (முத்துக் குவியல்களாகிய) தண்ணீரை வஹிந்து செல்லும் நதி என்ற சிறப்புப் பெயரைத் தருகிறார்.
ஸமுத்திரத்தை
'ரத்னாகரம்'
(ரத்தினங்களின்சுரங்கம்)
என்று கூறுவர்.
ஸமுத்திரத்தில் முத்துக் குளித்தல் என்பது
தாம்ரபரணியும் கடலும் ஸங்கமமாகும் இடத்தில் ( தூத்துக்குடி நகரத்திற்கு அருகில்) தான் நடைபெறுகிறது. இதைச் சமத்காரமாக கவி குறிப்பிடுகின்றார்.
நாட்டிலுள்ள நதிகள் அனைத்தையும் ஸமுத்திரத்தின் மனைவிகளாகவும், ஸமுத்திரத்தை நதிகளின்
ஒரே கணவன் என்றும் இலக்கியங்களில் கூறப்படுகின்றது. அதாவது,
ஸமுத்திரத்தை 'வாஹினீபதி:',
ஸரிதாம்பதி: , நதீனாம்பதி:' என்று ஆண்பாலிலும், நதிகளை
' உததிப்ரியா' என்று பெண்பாலிலும் குறிப்பிடுவர். பொதுவாக பெண்கள் முதன் முதலில் தன் கணவன் வீட்டிற்குச் செல்லும் போது ஸ்த்ரீதனமாக பல பொருட்களை எடுத்துச்செல்வர். அதே போல் நதிகளாகிய பெண்கள் தங்கள் கணவனாகிய கடலை அடையும் பொழுது தங்களிடம் உள்ள பல வகையான ஜல ஜந்துக்களை மட்டுமே கொண்டு செல்கின்றன.
ஆனால் ரத்னாபகா என்று அழைக்கப்படும் தாம்ரபரணியோ தன் கணவனை அடையும் பொழுது தன் கணவனுக்கு
'ரத்னாகரம்' என்ற சிறப்புப் பெயரை அளித்து கௌரவிக்கின்றது. தாம்ப்ரபரணி நதியினால் மட்டுமே ஸமுத்திரம்
' ரத்னாகரம்' என்ற பெயரைப்பெற்றுள்ளது.
अन्याविशन्त्य: सरित: समुद्रमापूरयन्तेजलजन्तुभि: स्वै: |
रत्नापगायत्रतुसंपतन्तिरत्नाकरत्वंरमणस्यदत्ते
||
அன்யா விசந்த்ய: ஸரித: ஸமுத்ரம்ஆபூரயந்தே
ஜலஜந்துபி:
ஸ்வை: |
ரத்னாபகா எத்ர து ஸம்பத்த்ந்தி ரத்னாகரத்வம்
ரமணஸ்ய தத்தே ||
தாம்ரபரணி நதியின் உற்பத்தி இடத்தில் வைடூர்யமும், நடுப் பகுதியில் நீலரத்தின கற்களும், கடலுடன் ஸங்கமமாகும் பகுதியில் முத்துக்களும் உண்டாகின்றன என்று தீக்ஷிதர் கூறுகிறார்
वैडूर्यनीलोत्पलमौत्तिकानियदादिमध्यन्तसमुद्भवानि
வைடூர்ய நீலோத்பலமௌத்திகானி யதாதிமத்யந்தசமுத்பவானி
தாம்ரபரணியை
'தக்ஷிணஜாஹ்னவீ'
- தென்திசையில் ஓடும் கங்கை என்று சிலேடையில் புகழ்கிறார் தீக்ஷிதர்.
காசியில் கங்கை வரணா நதியிலிருந்து அஸி நதி வரை தெற்கு முகமாக ஓடுவதால் 'தக்ஷிணவாஹினீ' கங்கா என்ற புகழை அடைகின்றது, அதில் ஸ்னானம் செய்பவர்கள் முக்தர்கள் ஆகிறார்கள்.
தாம்ரபரணி நதியும் தக்ஷிணவாஹினீ.
அதில் முத்துக்கள் உண்டாகின்றன என்பது பிரஸித்தம்.
கவிதீக்ஷிதர், ஒரு செய்யுளில் ' யத்ஸங்கமாதேவபவந்திமுக்த்தா: ' என்ற வாக்கியத்தை சிலேடையில் அமைத்து,
தாம்ரபரணி நதியை தக்ஷிண ஜாஹ்னவீ என்று புகழ்கிறார்.
காசியில் கங்கை வரணா நதியிலிருந்து அஸி நதி வரை தெற்கு முகமாக ஓடுவதால்
' தக்ஷிணவாஹினீ ' என்ற புகழ் கங்கைக்கு.
அதில் ஸ்னானம் செய்பவர்கள் முக்த்தர்கள் ஆகிறார்கள்.
தாம்ரபரணி நதியும் தக்ஷிணவாஹினீ.
அதில் முத்துக்கள் உண்டாகின்றன என்று உலகபிரஸித்தம்.
முக்த்தா:
என்ற பதத்திற்கு மோக்ஷமடைந்தவர்கள் என்றும் முத்துக்கள் என்றும் இருபொருள்கள்.
கங்கையில் மூழ்குபவர்களுக்கு மோக்ஷம்,
தாம்ரபரணியில் மூழ்குபவர்களுக்கு முத்துகள்.
ஆகவே கங்கைக்கு ஸமமான தாம்ரபரணி தக்ஷிண ஜாஹ்ணவீ என்ற புகழைப் பெருகிறாள்.
यत्संगमादेवभवन्तिमुक्त्ता:
साजाह्नवीसार्वजनीनमेतत् |
ततोविदु: दक्षिणजाह्नवीतितादृग्विधांयत्रहिताम्रपर्णीम
||
யத் ஸ்ங்கமாதேவ பவந்தி முக்த்தா: சா ஜாஹ்னவீ ஸார்வஜனீனமேதத் |
ததோ விது: தக்ஷிண ஜாஹ்னவீதி தாத்ருக்விதாம்
யத்ர ஹி தாம்ரபர்ணீம் ||
அகஸ்திய முனிவர் பொதிகை மலையில் தவம் செய்து கொண்டிருப்பவர்.
அங்கிருந்து தான் தாம்ரபரணி உற்பத்தியாகி கடலில் கலக்கின்றது.
கவி தாமிரபரணியை அகஸ்தியருடைய மகளாகக்கூறி, அவளை ஸகல விதமான ரத்னங்களாலும் அலங்கரித்து கோத்திரமஹத்தராய,
(சிறந்த கோத்திரத்தில் பிறந்தவனாகிய ,
கோத்திரங்களை, மலைகளை உள்ளே கொண்டுள்ள) ஸரஸ்வானுக்கு (ஸகலவித்யைகளையும் கற்றவனுக்கு, ஸமுத்திரத்திற்கு) திருமணம் செய்து கொடுத்தார்.
கவியின் தாம்ரபரணியைப் பற்றி உச்சகட்டமான சில கற்பனைகள்:
அகஸ்திய கோத்திரத்தில்
(மலையில்) பிறவி எடுத்து, கணவனாகிய தன்னை நோக்கி,
தினந்தோறும், ஓடிவரும் தாம்ரபரணியை கடல் புஷ்பங்களை வாரி இறைத்து வரவேற்பதைப் போன்று, தன் அலைகளில் நல் முத்துக்களைக் கலந்து வாரி இறைத்து வரவேற்கின்றானாம் !.
அகஸ்திய முனிவர் வட நாட்டிலிருந்து, சிவபெருமானின் ஆக்ஞைபடி தென்நாட்டிற்கு வந்து பொதிகை மலையை அடைந்து,
அங்கிருந்து வேறு ஓரிடத்திற்கும் செல்லாமல் அங்கேயே, நிரந்தரமாக, தன்னுடைய வாஸத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
ஏன்தெரியுமா?
ஒருஸமயம் அகஸ்தியர் ஸமுத்திரத்தின் உப்புநீர் அனைத்தையும் பருகினார்.
அதனால் நாக்கில் ஏற்பட்ட கரிப்புத்தன்மை விடுபடாமல் இருந்தது.
இயற்கையிலேயே மதுரமான தாம்ரபரணி தண்ணீரை பருகியதின் மூலம் கரிப்புத் தன்மையிலிருந்து விடுதலை கிடைத்ததினால் , இத்தாமிரபரணி தண்ணீரை தினமும் பருகுவதின் பொருட்டே, பொதிகைமலையை தன் நிரந்தர வாசமாக்க் கொண்டார் போலும் !
क्षारोदकास्वादभवंविपाकंअपाकरिष्यन्निवकुम्भजन्मा
|
जहातिशैलंमलयंनजातुपातुंप्रकृत्यामधुरंयदम्भ:
||
க்ஷாரோதகாஸ்வாதபவம்
விபாகம் அபாகரிஷ்யன்னிவ கும்பஜன்மா |
ஜஹாதி சைலம் மலயம் ந ஜாது பாதும்
ப்ரக்ருத்யா மதுரம் யதம்ப:
||
இயற்கையிலேயே மதுரமான தாம்ரபரணியின் தண்ணீர் நீரோடைகளின் மூலம் கடலில் கடக்கும் இடத்தில்
ஒரு ஸமயம் தேவர்களும் அஸுரர்களும், மந்திரமலையை மத்தாகக் கொண்டு கடைந்து கிடைத்த பொருளை தேவர்கள்
'அம்ருதம்'
'அம்ருதம் " என்று இன்றும் சாப்பிடுகிறார்கள்.
स्रोतोमुखैरम्बुनिधिंप्रविष्टंस्वाभावत:
स्वाद्दुयदियमम्भ:
|
निर्मथ्यलब्धंत्रिदशै: कदाचित्आस्वाद्यते`ध्यापिसुधासुधेति ||
ஸ்ரோதோமுகை: அம்புநிதிம் ப்ரவிஷ்டம் ஸ்வபாவத:
ஸ்வாது யதீயமம்ப:
நிர்மத்ய லப்தம் த்ரிதசை: கதாசித் ஆஸ்வாத்யதே அத்யாபி ஸுதே சஸுதேதி ||
இவ்வாறு தாம்ரபரணியின் மஹிமையை தன் கற்பனா சக்தியுடன் விவரித்துவிட்டு தனக்குத் தானே ஒரு வினாவை எழுப்பி, அதற்கு பதில் கூற முடியாமல் மழுப்புகிறார்.
இங்கு தாமிரபரணியை ஸர்வ ரத்னைககனி ' (எல்லா ரத்தின்ங்களுக்கும் ஒரேசுரங்கம் ' ) என்கிறார்.
यांसर्वरत्नैकखनिंविहायगङ्गामधात्केनगुणेनशम्भु: |
काप्रीतिरर्केसतिकेतकेपिनहीश्वरा:
पर्यनुयोज्यशीला:
||
யாம் ஸர்வரத்னைக கனிம் விஹாய கங்காமதாத் கேன குணேன சம்பு: |
கா ப்ரீதிரர்கே ஸதி கேத்தகே பி,
நஹீச்வரா: பர்யனுயோஜ்ய சீலா: ||
எல்லா ரத்தினங்களுக்கும் ஒரே சுரங்கமாக விளங்கும் தாம்ரபரணியை விட்டு விட்டு ஏன் கங்கை நதியை சிவபெருமான் தன் தலையில் தரிக்கிறார்?
இதற்கு பதில் கூறுவதற்கு பதிலாக,
வேறொரு வினாவை எழுப்புகிறார். அழகான நறுமணம் உள்ள தாழம்பூ இருக்கும் பொழுது சிவபெருமான் மணமே இல்லாத எருக்க மலரில் ஏன் ப்ரீதியுடன் உள்ளார்?
இவ்விரண்டு வினாவிற்கும் பதிலுறைக்காமல் பொதுவான ஒன்றைக் கூறி மழுப்புகிறார்.
கடவுள் அல்லது கடவுளுக்கு ஸமமான பெரியோர்கள் கேட்கக் கூடாத செயல் பாடுகளுடன் கூடியவர்கள் என்று கூறுகிறார்.
பெரியவர்கள் ஏதாவது தவறுதலை செய்து விட்டால் அது பெருமாள் (கடவுள்) செய்ததற்கு ஸமம் என்று சொல்வது தற்காலத்திலும் காணப்படுகிறது.
மற்றவர்களுக்கு புலப்படாத ஏதோ ஒரு காரியத்தின் பொருட்டு சில வற்றை செய்கிறார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும்.
இப்படிப்பட்ட தாம்ரபரணி ஒரு ஸாதரண நதியாக பாண்டிய நாட்டில் ஓடுகிறதென்றால் பாண்டிய நாட்டின் செழுமையைப் பற்றிசொல்ல வேண்டுமோ ?.
எஸ்.
ஜகதீசன்(உமையாள்புரம்) (8220389363)
ஓய்வுபெற்றசமஸ்கிருதபேராசிரியர்
மதுரைக்கல்லூரி, மதுரை